கூடார தரிசனம் (Tent Vision) இது 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்த்தருடைய தூதன் தோன்றி சகோதரர் பிரன்ஹாம் அவர்களுக்கு அருளிய தரிசனம் என் ஊழியத்தின் ஆரம்பத்தில் கர்த்தருடைய தூதன் எவ்விதம் ஒளியாகத் தோற்றமளித்து என்னுடன் பேசி எவ்விதம் நான் தரிசனத்தின் படி ஊழியம் செய்யவேண்டும் என்று கூறியதை நான் கூறக்கேட்ட, நானிருந்த என் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு ஊழிய சாகோதரன் அது பிசாசினால் உண்டானது என்றும் என் சபையும் நான் பின்பற்றும் உபதேசமும் தவறென்றும், தரிசனம் காணுதல் மற்றும் அற்புதங்களைச் செய்தலின் நாட்கள் முடிந்து விட்டது என்றும் கூறினார். ஒவ்வொரு யுகத்திலும் தாம் செய்து வந்தது போலவே இன்றும் தேவன் வேதாகமத்தில் தூதர்கள், தீர்க்கதரிசிகள், அதிசயங்கள், அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் தம் ஜனங்களைச் சந்திப்பதாக சபைக்கு வாக்களித்திருப்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அங்கே, சபை சரித்திரத்தில் ஏழு யுகங்கள் உண்டு. நாம் கடைசி யுகத்தில், ஆயிரம் வருட அரசாட்சிக்கு சற்று முன்புள்ள யுகத்தில் இருக்கிறோம். கர்த்தர் கூறினவிதமாகவே செய்ய நான் தீர்மானித்து அவருடைய வழிநடத்துதலின் படியே ஊழியத்தைத் துவங்கினேன். மூன்று ஆபத்துக்களைக் குறித்து ஒரு ஊழியக்காரன் கவனிக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். புகழ், பெண், பணம் போன்றவைகளை. முதல் இரண்டைக் குறித்து எனக்கு பயமிருக்கவில்லை. ஆனால் பணத்தைக்குறித்த காரியத்தில் பயமிருந்தது. ஆகவே பணத்தைக் குறித்த காரியத்தில் எனக்கு ஒரு நெருக்கமுண்டாகும் நேரம் வருமானால் நான் ஊழியக் களத்தை விட்டு விலகி விடுவேன் என்று 1946ல் தேவனிடம் வாக்குப் பண்ணியிருந்தேன். கூட்டங்களின் தேவைகள் சந்திக்கப்படும்வரை ஊழியம் செய்வேன் என்றும், தேவைகளில் குறைவு ஏற்படுமேயானால் ஊழியத்தை விட்டு வீட்டிற்குச் சென்று விடுவேன் என்றும் வாக்களித்திருந்தேன். ஒன்பதாண்டுகள் வரை நான் பணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ள அவசியமில்லாத வகையில் கர்த்தர் எல்லாத் தேவைகளையும் சந்தித்து வந்தார். ஆனால் 1955-60 என்னுடைய மூன்று தொடர்ச்சியான மிகப்பெரிய கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் செலவுகளின் தேவையில் குறைவு ஏற்பட்டது; எனவே சகோதரர்கள் அதிகமான குறைவுகளை சரிக்கட்ட முயற்சி மேற்கொண்டனர். இந்தக் கூட்டங்களின் முடிவு நாட்களில் என்னுடைய மனைவி, மகன் மற்றும் சிறிய மகளும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அது அதிகாலை 2+ மணி வேளையாயிருந்தது. அவர்களை உறங்கச் செல்லுமாறு கூறிவிட்டு நான் மலைப் பகுதிக்குச் சென்று முழங்கால் படியிட்டு தேவனை நோக்கிக் கதறினேன். நான் ஊழியக்களத்தை விட்டுவிட வேண்டும். தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களின் தேவைகள் சந்திக்கப்படவில்லை என்று மற்றவர்களால் குறைக் கூறி எழுதப்பட்டது. அது நான் தேவனிடத்தில் வாக்குப் பண்ணினது போல் இருக்கவில்லை. நான் வாக்குப் பண்ணினது என்னவென்றால் கூட்டங்கில் தேவை சந்திக்கப்படாவிட்டால் நான் ஊழியக்களத்தை விட்டு சென்று விடுவேன் என்பதே. நான் என் வாக்கை நிறைவேற்ற வேண்டிதாயிருந்தது. நான் என் அறைக்குத் திரும்பி வந்த போது நான் அழுது கொண்டிருந்ததைக் கண்ட என் மனைவி பில்லி உமக்குள்ள காரியம் என்ன? என்றாள். தெய்வீக சுகமளிக்கும் கூட்ட ஊழியங்களை விட்டு விடப்போகிறேன் என்பதை அவளிடம் கூற இயலாத வனாயிருந்தேன். எனவே -ஓ, அது அவ்வளவுதான்" என்று கூறினேன். நாங்கள் கலிபோர்னியாவிலிருந்து கிழக்குநோக்கி அரிசோனா, டெக்சாஸ், மற்றும் தேசத்தின் பல பகுதிகளையும் கடந்து இறுதியாக ஜெஃபர்ஷன்வில், இந்தியானாவுக்கருகில் வந்தபோது இதைப்பற்றிக் கூறினேன். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காவிட்டால் எனக்கு ஐயோ என்று வேதத்தில் பவுலினால் கூறப்பட்டுள்ளதே, எனவே நீர் அவ்வவாறிருக்க முடியாது என்று பில்லி பால் கூறினான். நான் அவனிடம் மகனே நான் சுவிசேஷ ஊழியத்தை விட்டு விடுவதாக ஒரு போதும் கூறவில்லை. கர்த்தர் என்னை ஜீவனோடு வைக்கும் வரை இந்த ஊழியத்தைச் செய்யவே விரும்புகிறேன். தெய்வீக சுகமளிக்கும் கூட்ட ஊழியங்களை விட்டு விடுவதைக் குறித்தே கூறினேன் என்றேன். "பணக்குறைவினிமித்தம் கடல் கடந்தும் மற்ற இடங்களிலும் நடைபெறவுள்ள பெரிய கூட்டங்களை விட்டு விடப் போகிறீர்களா? தேவன் அவைகளை விட்டு விடும்படி கூறவில்லை. அது உமது சொந்தத் தீர்மானம்" என்று பில்லிபால் கூறினான். நானோ ஒரு நேர்மையான மனிதன் தன் வார்த்தையைக் காத்துக்கொள்வான். நான் தேவனிடத்தில் ஒரு வாக்குப் பண்ணியிருக்கிறேன். அதை நான் காத்துக்கொள்ள வேண்டும் என்றேன். அடுத்த நாள் காலை என் மனைவியும் நானும் நேரத்தோட எழுந்தோம். நான் என் தலையைக் கைகளால் தாங்கியவாறு கட்டிலின்மேல் உட்கார்ந்திருந்தேன். நான் என் மனைவியிடம்,-நல்லது, தேனே நான் இன்று ஜெஸ் மிட்செலைக் கண்டு அவருடைய இன்டியானா லைட் அன்ட் பவர் கம்பெனியில் தொலைக்கம்பிகளைச் சுற்றி நடந்து பழுதுபார்க்கும் என் பழைய வேலையைத் திரும்ப அளிக்கும்படி கேட்கப் போகிறேன்" என்றேன். உடனடியாக நான் அறைக்கு வெளியே நோக்கினேன். அப்பொழுது இரண்டு பழைய மரக்கட்டைகளால் ஆன சக்கரங்களை உடைய சிறிய கட்டைவண்டியைத் தள்ளிக்கொண்டு இரண்டு சிறு பிள்ளைகள் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் மெக்சிகோவைச்சேர்ந்த ஏறக்குறைய நிர்வாண நிலையிலும் கறுப்புநிறசரீரமும் கறுப்புமயிரும் கறுப்புக் கண்களும் உடையவர்கள்போல் காணப்பட்டனர். என் மனைவி அறையில் நடமாடுவதை நான் கேட்க முடிந்தது; நான் அவளிடம், - தேனே, ஏழைச் சிறு பிள்ளைகள் என்று நான் கூறினேனே, அவர்களை பார்க்கவில்லையா?" என்று கேட்டேன். நான் தரிசனத்தின் ஆழமான பரிமாணத்தில் சென்றபோது நான் என் மனைவியை விட்டு சற்றப்பால் சென்று, குள்ளமான சகோதரன் ஆர்கன் பிரைட்டை சந்தித்தேன். அவர் - சகோதன் பிரன்ஹாமே, ஜெப அட்டைகளெல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. கூட்டத்துக்கு உங்களை அழைத்துவர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது' என்றார். சகோதரர் ஆர்கன் பிரைட்டுடன் யாரோ ஒருவர் இருந்தார். நான் அவர்களைக் கடந்து சென்றபோது நான் கண்ட சிறுபிள்ளைகளைப்போல் கறுப்பு நிறத்தவர்களாயிருந்த பெரிய கூட்டமாயிருந்த ஜனங்கள் நிரம்பியிருந்த வெளிப்புறத்திற்கு வந்தேன். அவர்களிடம் என் ஸ்தானத்தில் பேசிக் கொண்டிருந்தவர் வேறு ஒரு நபராயிருந்தார். என் அருகில் நின்ற ஒரு மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் யார் என்று கேட்டேன். அவர் என்னிடம் அவர்கள் அந்த மனிதரை அங்கு பேசவைத்துள்ளனர்" என்றார். நான் அவர்கள் யார்" என்றேன். அப்பொழுது ஒரு மனிதன் என் ஸ்தானத்தில் பேசிக்கொண்டிருந்தவர் கூட்டத்தை முடித்து விட்டார். அனைவரும் கலைந்து செல்லத்தொடங்கினர். நான், "ஓ, அது சரியல்ல, பீட அழைப்பு எங்கே?" என்று கூச்சலிட்டேன். ஒரு மனிதன் வந்து, நாங்கள் காணிக்கை எடுத்து விட்டோம். கூட்டத்தை முடித்துவிட்டோம் சகோதரன் பிரன்ஹாம்" என்றனர். நான், "எப்பொழுதிலிருந்து காணிக்கை யானது பீட அழைப்பைக் காட்டிலும் மிக முக்கியமானதாக ஆனது?” என்று கேட்டேன். ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்காக அங்கே ஆதாயப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அம்மனிதர் அவர்களைக் கலைந்துபோகச் செய்து விட்டார். மழைபெய்ய ஆரம்பித்து விட்டது. அந்த ஆத்துமாக்க ளெல்லாம் கலைந்து சென்று விட்டனர். ஒருவேளை அவர்கள் திரும்பவும் வராமற்போகலாம் என்றேன். அந்த மனிதன் என்னிடம், நீங்கள் அவர்களுடன் இன்று பிற்பகலில் பேசப்போகிறீர்கள்" என்றார். நான், "எந்த நேரத்தில் அவர்களுடன் பேசுவதாக அந்த மனிதர் அறிவிப்பு செய்தார்?" என்று கேட்டேன். அவர் -எந்த நேரத்திலும்” என்றார்.-எந்த நேரத்திலுமா? அங்கு பன்னிரண்டுபேர் கூட அந்நேரத்தில் இருக்க மாட்டார்களே?" என்று கூக் குரலிட்டேன். அப்பொழுது எனக்கு வலதுபக்கமாய்ப் பின்னாக இருந்து அன்பாக மெல்லிய சத்தமாய் ஆனால் உறுதியாக, -நம்முடைய கர்த்தர் சத்தியத்தை அவர்களுக்குச் சொன்னபோது ஆயிரக்கணக்கானவர்கள் அவரைவிட்டு விலகிய போது, பன்னிருவருடன் தனித்துவிடப்பட வில்லையா?" என்று வினவியது. ஒரு கரம் என் வலதுபக்கத்திலிருந்து எனக்கு முன்பாக அசைவாடியது. அப்பொழுது நான் (தரிசனத்தில்) இன்னும் ஓர் மேலான பரிமாணத்திற்குள் செல்வதுபோல் தோன்றினது. என் மனைவி மேடா அறையினுள் நடப்பதை அதற்கு மேல் என்னால் கேட்க முடியவில்லை. நான் ஒரு அழகான ஏரிக்கருகில் நின்றிருந்தேன்; அதைப்போன்ற தெளிவான நீரை நான் ஒரு போதும் என் வாழ்வில் கண்டதில்லை. முதலாவதாக நான் ஒன்பதாண்டுகளுக்கு முன்பு ஊழியத்திற்குச் சென்ற போது நான் ஒரு தரிசனம் கண்டேன். அதில் நான் மீன் பிடித்துக்கொண்டிருந்தேன். அந்த மீன் பெரிய வெண்மையும் கருமையுமான புள்ளிகளை உடையதாயிருந்தது. அவைகள் சரியாகக் காணப்பட வில்லை. ஆனால் இந்தத் தரிசனத்தில் ஏரி மிகப்பெரியதாயிருந்தது. அதிலே தெளிவான தண்ணீரும் மிகப்பெரிய அழகான ரெயின்போ ட்ரவுட் மீன்களும் இருந்தது. அதைச்சுற்றிலும் நூற்றுக்கணக்கான தேவ ஊழியக்காரர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நான் என் உள்ளத்தில், - நான் அவர்களைப் போன்றே நன்றாக மீன் பிடிப்பவன் அல்லது அவர்களைவிட நன்றாக மீன் பிடிப்பவன்'' என்று கூறினேன். நான் மிகப்பெரிய அழகான மீனைப் பிடிக்கவேண்டும் என்றிருந்தேன். அதற்காக என் தூண்டிலையும் இரையையும் தயார்செய்ய ஆயத்தமானேன். அதன் பிறகு எனக்குப் பின்புறம் வலது பக்கமாக என் சிறுவயது முதல் என்னோடு பேசிக் கொண்டிருக்கும் கர்த்தருடைய தூதனின் சத்தம் -எப்படி மீன் பிடிப்பது என்று உனக்கு நான் கற்பிப்பேன். ஆனால் அதைக்குறித்து கண்டிப்பாய் யாரிடமும் எதுவும் கூறாமல் நீ அமைதலாயிருக்க வேண்டும்" என்றது. நான் அமைதலாயிருப்பேன் என்று பதிலுரைத்தேன். அவர் உன் இரையைத் தூண்டிலின் முனையில் வை என்றார். நான் அவ்வாறு செய்தேன். அப்பொழுது அவர் -இப்பொழுது அந்தப் பெரிய மீனைப்பிடிக்க நீ தூண்டிலை ஆழமான தண்ணீரில் போடவேண்டும்" என்றார். நான் தூண்டிலை என் முழுப்பெலத்தோடு வீசினேன். தூண்டில் கயிறு அதன் முழு நீளத்தோடு தண்ணீரில் விழுந்தது. அவர் அது நன்றாகச் செய்யப்பட்டது என்றார். தூண்டில் கயிறு தண்ணீரின் ஆழத்தில் சென்றபோது அவர் -இப்பொழுது, முதலில் மெதுவாய் இழுத்து மீன்களை வசப்படுத்து. அதன்பிறகு தூண்டில் முள்ளை வேகமாய் தண்ணீரிலிருந்து இழு; அவர்கள் சிறிய மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது உனக்குப் பெரிய மீன் அகப்படும், அமைதலாயிருக்கக் கவனமாயிருந்து இதைக் குறித்து யாரிடமும் ஒன்றும் கூறாதே. மூன்றாம் இழுப்புக்காக உன் தூண்டிலை கெட்டியாய்ப் பிடித்துக்கொள். அப்பொழுது நீ உன் மீன் பிடிப்புக்கு ஆயத்தமாயிருப்பாய்" என்றார். -நான் அறிந்து கொண்டேன்" என்றேன். எல்லா ஊழியக்காரர்களும் எல்லா இடங்களிலுமிருந்து வந்து -சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் மீனைப்பிடிக்க முடியும் என்று அறிவோம்" என்றனர். நான்,-ஓ, ஆம், அதை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும்" என்றேன். அப்பொழுது கர்த்தருடைய தூதன் எனக்குச் சொன்ன வண்ணமாகவே அதை அவர்களுக்கு விவரித்தேன். ஊழியக்காரர்களுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று விவரித்துக் காண்பித்தபோது நான் பரவசமடைந்தேன். எனவே என் தூண்டிலை தண்ணீரிலிருந்து மேலே இழுத்து தூண்டில் முனையளவுள்ள ஒரு மீனைப் பிடித்தேன். தூண்டிலின் முனையில் மீனின் தோல் நன்கு சுற்றிக் கொண்டதுபோல் தோன்றினது. ஓ, நான் எவ்விதமாய் எப்பொழுதுமே இல்லாத விதமாய் அதைப் பிடித்தேன் என்று வியந்தேன். கர்த்தருடைய தூதன் என் வலது பக்கமாய் பின்புறத்திலிருந்து நடந்து எனக்கு முன்பக்கமாய் எனக்கு நேராக வந்தார். நான் எப்பொழுதும் பார்த்திருப்பது அவரைத்தான். மிக கரங்களுடையவராய் வெண்ணிற அங்கி தரித்தவராய், வெறுங்கால்களுடன் கருத்த தலைமயிர் உடையவராய் அவர் காணப்பட்டார். அவர் என் முகத்தை நேராக உற்றுப்பார்த்து-நான் உன்னை எதைச்செய்யக் கூடாதென்று கூறினேனோ அதையே நீ செய்தாய்" என்றார். அப்பொழுது அதுவே என் முடிவு என்று நான் எண்ணினேன். மேலும் அவர், -முதல் தடவை தூண்டிலை மெதுவாக இழுக்கவும் அதைப்பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாயிருக்கும் படியும் கூறினேன். அது உன் கரங்கள் மீது ஜனங்களின் கைகளை வைக்கும்போது அவர்களின் வியாதிகளை உனக்கு வெளிப்படுத்திக் கூறின போது ஆகும். உன்னிடம் தூண்டிலை வேகமாக இழுத்து பின் அதைப்பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருக்கும்படி கூறினபோது அது நான் சொன்னபடியே உனக்கு ஜனங்களின் இருதயங்களின் இரகசியங்களை அறிந்து வகையறுத்துக் கூறும்படி செய்தேன். அது இரண்டாம் இழுப்பு. இக்காரியங்களைக் குறித்து அமைதியாயிருப்பதற்கு மாறாக நீ மேடைகளின்மேல் நின்று இந்த தெய்வீக வரங்களைக் குறித்துப் பொதுவான காட்சியைக் காட்டிவிட்டாய். பார் நீ எவ்வளவு மாம்சப்பிரகாரமான போலிபாட்களைத் தோன்றச் செய்து விட்டாய்" என்றார். நான் மிகவும் சத்தமாய்க் கதறி, -நான் அவ்விதமே செய்துவிட்டேன், நான் வருந்துகிறேன் ஐயா" என்றேன். என் தூண்டில் கயிறுகள் என் கால்களைச் சுற்றிக்கொண்டது. என் தூண்டில் என் கைகளில் இருந்தது. நான் கதறிக்கொண்டிருந்த போது தூண்டில் கயிறை நேராக்கும்படி அதை என் பற்களால் கடித்து இழுத்தேன். அப்பொழுது அவர் என்னைக் கடினமாய் உற்று நோக்கி, "நீ இப்படிப்பட்ட நேரங்களில் உன் தூண்டில் கயிறை சுருண்டு விடும்படி செய்யாதே” என்றார். நான் -ஐயா, தூண்டில் கயிறை இனிமேல் ஒரு போதும் சுருண்டு விட செய்ய மாட்டேன். என் மீது தயவாயிரும்" என்றேன். அப்பொழுது நான் இன்னும் சற்று மேலான ஓர் பரிமாணத்திற்குள் செல்வது போல் தோன்றினது. என் கரத்திலிருந்த தூண்டில் கயிறு அரையங்குல அளவுள்ள ஒரு காலணியின் கயிறாக மாறியிருந்தது. நான் ஒரு சிறு பிள்ளையின் காலணியைக் கையில் பிடித்திருந்தேன். அதில் 1/8 அங்குல அளவான துவாரங்கள் இருந்தது. நான் அந்த அரை அங்குல அளவான காலணிகயிறை 1/8 அங்குல அளவான துவாரத்தில் நுழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்படிச் செய்தபோது காலணிக்கயிற்றின் சில நூலிழைகளை உடைத்திருந்தேன் (கிழித்திருந்தேன்). எனக்கு முன்பாக நின்ற கர்த்தருடைய தூதன் உறுதியாக ஆனால் தயவாக என்னிடம் -நீ என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார். நான் -அக்கயிற்றைக் கொண்டு காலணியைக் கட்ட முயற்சிக்கிறேன்'' என்றேன். அவர் கயிற்றின் தவறான முனையைப் பயன்படுத்தப் பார்க்கிறாய்'' என்றார். நான் கீழே பார்த்து அந்த மறுமுனை ஒரு தகட்டினால் சுற்றப்பட்டு அந்த துவாரத்தில் எளிதாக நுழைய ஏதுவாக மெல்லியதாக்கப் பட்டிருப்பதைக் கவனித்தேன். நான், -ஓ, வருந்துகிறேன் ஐயா, நான் தவறான முனையைப் பயன்படுத்தினதை நான் கவனிக்கவில்லை" என்றேன்."உலகத்துக்குரிய உதாரணங்களைக் கூறாமல் சிறு பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களைப் போதிக்கமுடியாது" என்றார் கர்த்தருடைய தூதன். அப்பொழுது இன்னும் சற்று மேலான பரிமாணத்திற்குள் செல்வதாக நான் உணர்ந்தேன். நான் இதுவரை என் வாழ்வில் கண்டிராத மிகப்பெரிய கூடாரத்தில் ஆகாயத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு கீழாக அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மேல் எல்லா ஜனங்களுக்கும் மேலாக நான் இருந்தேன். நான் பிரசங்கத்தை முடித்தவுடனே பீட அழைப்புக் கொடுத்தேன். அங்கே நூற்றுக்கணக்கான ஜனங்கள் தங்கள் கைகளை மேலே உயர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தனர். அவர்களிருக்கும் இடத்திற்கு கீழே இறங்கிச் செல்ல நான் முயற்சி செய்து கொண்டிருந்த போதிலும் நான் ஆகாயத்திலேயே தான் இருந்தேன். ஒரு உண்மையான, தயவுள்ள, நல்ல தோற்றமுள்ள ஒரு மனிதர் ஜனங்களுக்கு முன்பாக வந்து, அருமை நண்பர்களே, நமது சகோதரன் பிரன்ஹாம் இந்த அற்புதமான பீட அழைப்பை முடித்து சற்று ஒரு கணம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வலது பக்கமாக ஒரு ஜெபவரிசையை அமைப்போம்" என்றார். என்னால் காணக்கூடிய தூரம்வரை கூடாரத்தின் உள்ளேயும் வெளியேயும் தெருவிலும் அதனைக் கடந்து செல்லும் தூரம் வரையும் ஜனங்கள் திரண்டிருக்கும் ஜெபவரிசை அமைக்கப்பட்டது. தோல் துணியாலான வேலியமைப்பு நான்கு அடி உயரமானதாகவும் ஒரு நுழைவாயிலை உடையதாகவும் கூடாரத்தின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். அந்த வேலியமைப்பினுள் சதுரவடிவான சிறிய மரப்பெட்டி அறை ஒன்று இருந்தது. தோல்துணியாலான வேலியமைப்புக்குள் செல்லும் வாயிலின் அருகில் ஒரு ஸ்திரீ ஒரு சக்கர நாற்காலியில் ஒரு ஸ்திரீயை வைத்துக்கொண்டு அவளுடைய பெயரையுடைய ஒரு ஜெப அட்டையையும் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அந்தத் தள்ளுவண்டிக்குப் பின்பக்கமாக ஒரு மனிதன் கக்கத் தண்டங்களுடன் இருந்தான். அந்த ஸ்திரீ அந்த மனிதனுடைய ஜெப அட்டையையும் பெயரையும் வைத்திருந்தாள். ஒரு பலமான மனிதன் வந்து ஸ்திரீ படுக்கவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியை தோல் துணியாலான வாயிலினூடாக அந்தச் சிறிய மரப்பெட்டி அறைக்குள் தள்ளிக் கொண்டுபோய் விட்டான். என் ஊழியத்தில் என்னோடு கூடவேயிருக்கும் அந்த ஒளியின் - உஷ்" என்ற எனக்குப் பரிச்சயமான அந்த சத்தத்தை நான் கேட்டேன். அந்த ஒளி என்னிடத்திலிருந்து அந்தச் சிறிய அறைக்குள் சென்றது. கர்த்தருடைய தூதன் இன்னும் ஆகாயத்தில் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவர், -அங்கே உள்ளே உன்னைச் சந்திப்பேன்" என்றார். அவருடைய கரம் அந்த சிறிய அறையைச் சுட்டிக் காட்டியதை நான் கண்டேன். மேலும் அவர் -இது என் மூன்றாம் இழுப்பு' என்றார். நான் -இது எனக்குப் புரியவில்லை" என்றேன். அவர் நான் உன்னை அங்கே சந்திப்பேன்" என்றார். நான் கவனித்துப் பார்த்தபோது வியாதியுள்ளவளாயிருந்த ஸ்திரீ சிறிய அறையின் மறுபுறத்திலிருந்த ஒருவாயிலின் வழியாக வெளியே வந்தாள். அவள் அப்பொழுது உள்ளே தள்ளிக்கொண்டு போகப்பட்ட தள்ளுவண்டியில் இருக்கவில்லை. ஒரு சகோதரி அவளுடைய சாட்சியைப் பதிவு செய்ய பதிவுசெய்யும் கருவியுடன் (Tape Recorder) நின்றிருந்தாள். சிறிய அறையிலிருந்து வெளியே வந்த ஸ்திரீயிடம் அந்த சகோதரி -அந்தச் சிறிய அறையில் என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டாள். அதற்கு அவள் -எனக்குத் தெரியாது" என்றாள். அதன் பிறகு கக்கத் தண்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த மனிதன் வெளியே வந்தான். அந்த சகோதரி அவனிடன் -அந்தச் சிறிய அறையில் என்ன நிகழ்ந்தது?" என்று வினவினாள். அவன் -எனக்குத் தெரியாது" என்றான். கர்த்தருடைய தூதன், இது பொது ஜனங்கள் யாவருக்குமான காட்சி அல்ல. வேதத்திலே நம்முடைய கர்த்தரின் வார்த்தை, நீயோ ஜெபம்பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பரமபிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மாயக்காரரைப் போல மனுஷர் காணவேண்டுமென்று செய்யாமல் நீங்கள் உங்கள் மறைவிடங்களில் ஜெபியுங்கள்'என்று எழுதப் பட்டிருக்கவில்லையா?" என்றார். அப்பொழுது கர்த்தருடைய தூதனும் நானும் சிறிய அறைக்குள் இறங்கினோம். அவர் அங்கு கூறியது, நான் இந்த இரகசியத்தை என் வாழ்நாள் முழுவதும் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே.